தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இடைத்தேர்தலில் திசை மாறிய ஓட்டுகள் அ.தி.மு.க., - தே.மு.தி.க., அதிர்ச்சி

இடைத்தேர்தலில் திசை மாறிய ஓட்டுகள் அ.தி.மு.க., - தே.மு.தி.க., அதிர்ச்சி

இடைத்தேர்தலில் திசை மாறிய ஓட்டுகள் அ.தி.மு.க., - தே.மு.தி.க., அதிர்ச்சி


ADDED : ஜூலை 16, 2024 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினரின் கனிசமான ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு சென்றது, இரு கட்சியினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலானது, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தது. அதனால், ஆளும் தி.மு.க., கூட்டணி தீவிரமாக களமிறங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டது.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கத்தால், நேர்மையாக தேர்தல் நடக்காது என்பதால், அ.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதோடு, அ.தி.மு.க.,வினர் யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர். இதேபோல், தே.மு.தி.க., தரப்பிலும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

எப்போதும், இடைத்தேர்தலில் போட்டியிடாத பா.ம.க., தரப்பு, இந்த முறை முந்திக்கொண்டு பாஜ., கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. சொந்த மாவட்டம், அதிக செல்வாக்குள்ள தொகுதி என்பதாலும், தீவிரமாக களத்தில் இறங்கினர்.

தேர்தலில் போட்டியிடாத அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை பெறும் எண்ணத்தில், அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.,வினர், நேரடியாக ஜெயலலிதா புகழ்பாடி, அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை பெற முயன்றனர்.

இதனால், தி.மு.க., தரப்பு அதிருப்தியாகி, தாராளமாக செலவிட்டு, தீவிர பிரசார களத்தில் இறங்கியது. இந்நிலையில், தேர்தல் முடிந்து, ஆளும் தி.மு.க., தரப்பு 1 லட்சத்து 24 ஆயிரம் 53 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது.

தேர்தலை அ.தி.மு.க., - தே.மு.தி.க., புறக்கணித்துள்ளதால், அதன் தொண்டர்கள் பெரும்பாலும், நோட்டாவுக்கும், பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவர்கள் என பரவலாக பேசப்பட்டது.

ஆனால், நோட்டாவுக்கு 859 பேர், சொற்பளவில் ஓட்டளித்திருந்தனர். இதனால், இரு கட்சிகளின் ஓட்டுகள் நோட்டாவுக்கு போகவில்லை, தேர்தலையும் புறக்கணிக்கவில்லை, மாறாக தி.மு.க.,விற்கு ஓட்டளித்துள்ளது, இது அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது ஓட்டுகளை எதிர்பார்த்த பா.ம.க., அப்செட் ஆகியுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க., தரப்பில் கூறுகையில், 'இந்த இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதால் புறக்கணித்தோம். விரும்புபவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என தலைமை கூறிவிட்டது. தேர்தலுக்கு முன், ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் நடத்திய மாவட்ட செயலாளர் சண்முகம், நமக்கு எதிரி தி.மு.க.,தான், அதுக்கு ஓட்டு போடாமல், உங்கள் விருப்பம் போல், யாருக்காவது ஓட்டு போடுங்கள் என்று கூறியிருந்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்களும், மறைமுகமாக பா.ம.க.,வுக்கு ஆதரவாக ஓட்டுபோடும்படி கூறியிருந்தனர்.

ஆனால், தி.மு.க.,வுக்கு அதிகளவில் ஓட்டு சென்றுள்ளது.

அதற்கு காரணம், இடைத்தேர்தல் என்றால், ஆளுங்கட்சியினர் தாராளமாக செலவிடுவதும், கட்சிகளை மறந்து, பணம் வாங்கி ஓட்டு போடுவதும் இயல்பாக மாறியுள்ளது. கட்சிகளை மீறி, சமூக ரீதியாகவும் ஓட்டுகள் பிரிந்துள்ளது' என்றனர்.

-நமது நிருபர்-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us