அ.தி.மு.க., வீறு கொண்டு எழும்: செல்லுார் ராஜூ கூறுகிறார்
அ.தி.மு.க., வீறு கொண்டு எழும்: செல்லுார் ராஜூ கூறுகிறார்
ADDED : மே 13, 2024 06:41 AM

மதுரை : மதுரை நகர் அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பின் செல்லுார் ராஜூ கூறியதாவது: தி.மு.க.,வின் மூன்றாண்டு சாதனையை மக்கள் கொண்டாடவில்லை. தமிழகத்தில் போலீஸ் உதவியுடன் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை.
பழனிசாமிக்கு பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை உட்பட யார் வாழ்த்து சொன்னாலும் மகிழ்ச்சியே. எல்லோரும் வாழ்த்தும் அளவு தகுதி படைத்தவர் பழனிசாமி. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர்., போல சம்பாதித்தப் பணத்தை மாணவர்களுக்கும், மக்களுக்கும் செலவழிக்கிறார்.
தி.மு.க., ஆட்சியில் எல்லா துறைகளையும் கைப்பற்றுவதைப் போல சினிமா துறையையும் கைப்பற்றி உள்ளனர். அமைச்சர் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் திரையரங்குகளை அதிகளவில் கைப்பற்றி உள்ளனர்.
அவர்கள் நினைத்தால் தான் படம் ரீலிஸ் ஆகும். இதனால் ஏ.வி.எம்., நிறுவனமே தயாரிப்புகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வில் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளனர். வெயில் காலம் ஆலமரத்தில் சில இலைகள் உதிரும். பல இலைகள் புதிதாக துளிர்க்கும். அதுபோல் அ.தி.மு.க.,வில் இருந்து சிலர் போவர். பலர் வருவர். வேப்பமரம் போல பட்டுப் போய்விடும் என நினைத்தனர். அ.தி.மு.க., பீனிக்ஸ் பறவை போன்றது. அழிவது போலத் தெரியும். ஆனால் வீறுகொண்டு எழும் என்றார்.