மசாலா பொருளில் கலப்படம்; சிக்கலில் பிரபல நிறுவனங்கள்
மசாலா பொருளில் கலப்படம்; சிக்கலில் பிரபல நிறுவனங்கள்
ADDED : ஆக 20, 2024 07:39 AM

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனங்களின் மசாலாவில் நடத்தப்பட்ட சோதனையில் 12 சதவீத பொருட்கள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகியவை பிரபலமான மசாலா தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் இந்நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரிட்டன், நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டன. ஹாங்காங் இந்த நிறுவனங்களின் மசாலப் பொருட்களின் தயாரிப்புக்கு தடை விதித்து விட்டது.
இதனால் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் மாதிரிகளை எடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சோதனைக்கு அனுப்பியது.
அதில் 12 சதவீதம் மாதிரிகள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் தங்களின் தயாரிப்புகள் தரமானவை என்றும், பாதுகாப்பானவை என்றும் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
மாதிரிகளின் சோதனை விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க இருப்பதாகவும், தரமற்ற மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

