மழையில் கவனமாக பஸ்களை இயக்குங்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை
மழையில் கவனமாக பஸ்களை இயக்குங்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை
ADDED : மே 20, 2024 12:48 AM
ராமநாதபுரம்: - திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் அரசு பஸ் சிக்கிய நிலையில், தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்களில் கனமழை காலத்தில் டிரைவர், கண்டக்டர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவுரை வழங்கி மேலாண் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் தெரிவித்திருப்பதாவது:
மழை ,வெள்ளம் ,சூறாவளி காலத்தில் பஸ்களை பொதுமக்கள் தேவையின் அடிப்படையில் போதிய இடைவெளி விட்டு இயக்க வேண்டும். இடது புறம் சாலையை விட்டு அதிக ஓரத்தில் இயக்க கூடாது. அசம்பாவித சம்பவங்களை சமாளிக்க ரெகவரி வேன், பிரேக்டவுன் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
டாப் வெண்டிலேட்டர்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அப்பகுதியில் பஸ்களை இயக்க கூடாது.
பஸ்களில் முகப்பு விளக்கு பிரகாசமாக எரியும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் ஜன்னல் கண்ணாடி, கூரைகள், இருக்கை மெத்தை உறை போன்ற குறைகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அனைத்து டயர் வீல்களிலும் உள்ள நட்டுகள் சரியாக உள்ளதை சோதனை செய்ய வேண்டும். இதனை அனைத்து கிளை மேலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.---------

