UPDATED : ஜூன் 25, 2024 10:53 AM
ADDED : ஜூன் 24, 2024 11:54 PM

சென்னை: ''அரசு பள்ளி மாணவியர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தங்களை பாதுகாத்துக்கொள்ள, 'அகல் விளக்கு' என்ற திட்டம் துவங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
சட்டசபையில், அவரது அறிவிப்புகள்:
* காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி குறித்து, 2.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையில், மாதிரி சட்டசபை, மாதிரி பார்லிமென்ட் கூட்டம், 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்
* ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும்
* மாற்றுத்திறன் குழந்தைகள், விளையாட்டு வாயிலாக கற்றல் அனுபவங்களை பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வகை திறன் பூங்கா உருவாக்கப்படும்
* அரசு பள்ளி மாணவியர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதளங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும், வழிகாட்டுதல் வழங்குவதற்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அகல் விளக்கு' என்ற திட்டம் துவங்கப்படும்
* அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, நாட்டில் உள்ள தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை, அரசே ஏற்றுக் கொள்ளும்
* தமிழர் நாகரிகம், பண்பாடு உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிப்பதற்காக, 1,000 ஆசிரியர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கப்படும்
* வீடுகளில் சொந்த நுாலகம் அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.