'டாஸ்மாக்' ஊழல் பற்றி பேச அனுமதி மறுப்பு பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., - பா.ஜ., வெளிநடப்பு
'டாஸ்மாக்' ஊழல் பற்றி பேச அனுமதி மறுப்பு பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., - பா.ஜ., வெளிநடப்பு
ADDED : மார் 14, 2025 06:58 PM

சென்னை:டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டசபையிலிருந்து அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
வரும் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கியதும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் எழுந்து பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுக்கவே, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின், பழனிசாமி அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை விதி 68ன்படி, சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், கடந்த ஜனவரி 16ல் கடிதம் கொடுத்திருந்தார். சட்டசபை விதி 63-ன்படி, முன்னறிவிப்பு கொடுத்து, 14 நாட்கள் முடிந்து விட்டது. எனவே, சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, உதயகுமார் கோரிக்கை விடுத்தார்; அதை ஏற்க, சபாநாயகர் மறுத்து விட்டார்.
அ.தி.மு.க., ஆட்சியில், சபாநாயகர் தனபாலை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானம் கொண்டு வர, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். 14 நாட்கள் முடிந்ததும், அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தியில், '1000 கோடி ரூபாய்க்கும் மேலாக முறைகேடு நடந்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக முடியும்போது, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆனாலும், இதுபற்றி தமிழக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று, தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும். இப்பிரச்னைகள் பேச அனுமதிக்காததால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.