ADDED : ஏப் 18, 2024 07:56 PM
சென்னை:தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள், தங்கள் ஓட்டை பதிவு செய்வதற்காக, நேற்று காலை முதல் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். ரயில்களில் டிக்கெட் இல்லாததால், கூடுதல் கட்டணம் செலுத்தி விமானம் வாயிலாக ஏராளமானோர் சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களில், நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பயணியர் கூட்டம் அதிகரித்ததை ஒட்டி, வழக்கம் போல் விமான கட்டணமும் அதிகரித்து காணப்பட்டது.
இது குறித்து விமான நிலை அதிகாரிகள் கூறுகையில், 'கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்து, நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. டில்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அனுமதி பெற வேண்டும்.
'மேலும், சென்னையில் இருந்து செல்லும்போது பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த விமானங்கள் திரும்பி வரும்போது காலியாக வருவதால், நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும்' என்றனர்.

