தகுதியான அனைவரும் வாக்காளர்களாக மாற வேண்டும்: தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேட்டி
தகுதியான அனைவரும் வாக்காளர்களாக மாற வேண்டும்: தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேட்டி
ADDED : பிப் 27, 2025 09:08 AM

மதுரை; நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக மாற வேண்டும்; தேர்தல் கமிஷன் எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காகவே செயல்படும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் தொடர்பாக மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த், டி.ஆர்.ஓ., ராகவேந்திரன், ஆர்.டி.ஓ.,க்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது வாக்காளர் பட்டியல் ஆய்வு, ஓட்டளிப்பதன் அவசியம், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வாக்களிப்பது என்பது தான் நாட்டிற்கு செய்யும் முதல் சேவை. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் நலனுக்காகவே தேர்தல் கமிஷன் உள்ளது. மதுரையில் தேர்தல் பணி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பணிகள் சிறப்பாக நடக்கின்றன என்றார்.
லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டபோதும் பதில் சொல்லாமலேயே பேட்டியை முடித்துக்கொண்டார். பின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின் ராமேஸ்வரம் கிளம்பி சென்றார்.
உத்வேகம் தந்த கலாம்
ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகத்திற்கு வந்த ஞானேஷ்குமாரை ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் வரவேற்றனர். கலாம் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது புகைப்படங்கள், மெழுகு சிலைகளை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது: அப்துல் கலாம் நினைவகத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கேரளா எர்ணாகுளம் கலெக்டராக நான் இருந்தபோது மாதா அமிர்தானந்தமயி நடத்திய தியான கூட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்றார். அவரை என் குடும்பத்தினருடன் சந்தித்து பேசினேன். அது எங்களுக்கு புது உத்வேகத்தை கொடுத்தது என்றார்.
பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்தங்களில் புனித நீராடினார். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மார்ச் 4, 5ல் ஆய்வு கூட்டம்
ஞானேஷ்குமார் தலைமையில் ராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அவர் கூறுகையில், கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. டில்லியில் மார்ச் 4, 5ல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் ஆணையம் எப்போதும் வாக்காளர்களுக்கு துணை நிற்கும் என்றார்.