தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்தது!
தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்தது!
UPDATED : மார் 25, 2024 04:03 PM
ADDED : மார் 25, 2024 12:59 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,எம்.பி டி.ஆர்.பாலு, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(மார்ச் 25) தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஓ.பி.எஸ்., - அன்புமணி மனைவி
* பா.ஜ., கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பன்னீர்செல்வம் மருச்சுக்கட்டு செல்வ விநாயகர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட்டார். பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
* தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சேலம் பிரபல வெண்ணங்குடி முனியப்பன் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய அமைச்சர் முருகன்
நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் முருகன், வேட்பு மனு தாக்கல் செய்தார்.
*ஆரணி தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் கனேஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
* முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியிலும், திருச்சியில் ம.தி.மு.க., சார்பில் துரை வைகோ, பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசன் மதுரை லோக்சபா தொகுதியிலும், தென் சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசிப் பெற்றார்.
நேருக்கு நேர் சந்திப்பு
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் பன்னீர் செல்வம், கலெக்டர் விஷ்ணு சந்திரன் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை நேருக்கு நேர் சந்தித்து வாழ்த்து கூறினார்.

