ADDED : ஏப் 06, 2024 12:27 AM

சென்னை:தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தமிழகத்தில் நேற்று 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு பணி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சோதனை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி என்.ஜி.ஓ.பி., காலனியில் வசிப்பவர் அ.தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.முருகன்; அரசு பணி ஒப்பந்ததாரர்.
தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம் மற்றும் திருச்செந்துார் -- அம்பாசமுத்திரம் சாலை, 450 கோடி ரூபாய் மதிப்பிலான தென்காசி - நெல்லை நான்கு வழி சாலை உட்பட, பல நெடுஞ்சாலை பணிகளுக்கான ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது ஒரு சகோதரர் தி.மு.க.,விலும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியிலும் உள்ளனர்.
இவரது வீடு மற்றும் பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லுாரி அருகேயுள்ள இவரது வணிக வளாக அலுவலகத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
காலை முதல் மாலை வரை நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
வேலுமணி கூட்டாளி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேவூர் சாலை, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் வேலுமணி. குடிநீர் வடிகால் வாரியத்தில், முதல்நிலை ஒப்பந்ததாரராக உள்ளார்.
இவருக்கு சொந்தமான, 'வி.ஆர்.வாட்டர் இன்ப்ரா' நிறுவன அலுவலகம், திருப்பூர் சாலையில் செயல்படுகிறது. இவரது மனைவி தேவகி பெயரில் பெட்ரோல் பங்க் ஒன்றும் இயங்குகிறது.
வேலுமணிக்கு சொந்தமாக காமராஜ் நகரில் உள்ள மூன்று வீடுகள், வி.ஆர்.வாட்டர் நிறுவனம், பெட்ரோல் பங்க் என, ஐந்து இடங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய விரைவு போலீஸ் படையின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்தது.
ஒப்பந்ததாரர் வேலுமணி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். ஒப்பந்ததாரர் வேலுமணியின் மகன் திருமணம், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு பெருந்துறை சாலை பழைய பாளையத்தில், சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான, ஆர்.ஆர்.துளசி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இதன் அலுவலகம் அங்குள்ள சக்தி மஹாலில் உள்ளது.
இவர், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
சென்னை பைனான்சியர்
பழைய பாளையம் கணபதி நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அவரது கட்டுமான நிறுவன அலுவலகத்தில், வருமான வரி அதிகாரிகள், நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள, பைனான்சியர் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
இதில், 3 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த பணத்துக்கு ஆவணங்கள் உள்ளதா என, வருமான வரி அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், பைனான்சியர் தங்கவேலு, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகம் மற்றும் சேலம் துணை மேயர் சாரதா தேவி ஆகியோரது வீடுகள்.
சென்னையில் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்த எலக்ட்ரிக்கல் சாதன மொத்த வியாபாரி ஒருவரது வீடு, அலுவலகங்களில், நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டு, 4 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

