கல்வியை கலவரமாக்கவே அனைத்து கட்சி கூட்டம்: பா.ஜ.,
கல்வியை கலவரமாக்கவே அனைத்து கட்சி கூட்டம்: பா.ஜ.,
ADDED : மார் 05, 2025 06:49 AM

சென்னை : தமிழக பா.ஜ., மாநில மையக் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மும்மொழிக் கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்தை, மக்களிடம் கொண்டு செல்வது, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர் வினையாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு, எச்.ராஜா அளித்த பேட்டி: அனைத்து கட்சி கூட்டம் நடத்தும்போது, என்னென்ன விவாதிக்கப்பட உள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும். குறிக்கோளின்றி, மத்திய அரசை தாக்குவதற்காகவே கூட்டத்தை அரசு நடத்துகிறது.
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
இது தொடர்பாக, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததும், தொகுதி மறுவரையறை குறித்து, முதல்வர் ஸ்டாலின் பொய்யான விஷயத்தை கூறுகிறார். மும்மொழிக் கல்வி தொடர்பாக, நாளை முதல், பா.ஜ., சார்பில் மக்களை சந்தித்து, கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
கல்வியை கலவரமாக்க வேண்டும் என்பதற்காகவே, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''அனைத்து கட்சி கூட்டத்தில், எத்தனை பேர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்துகின்றனர் என்ற விபரத்தை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்,'' என்றார்.