அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை என குற்றச்சாட்டு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை என குற்றச்சாட்டு
ADDED : மார் 09, 2025 02:32 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால், கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஜாகீரா, 31, என்பவரும்; திண்டுக்கல் மாவட்டம், சிங்காரகோட்டை பகுதியைச் சேர்ந்த கோபி, 36, என்பவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கோபி கேரள மாநிலத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். ஜாகீரா இரண்டாவதாக கர்ப்பம் தரித்த நிலையில், அவர் சிறுபாடு கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கடி பரிசோதனைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக டாக்டர்கள் யாரும் இல்லாததால், செவிலியர்கள் சிலர் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஜாகீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரது பனிக்குடம் உடைந்து விட்டதாகக் கூறி அங்கிருந்த செவிலியர்கள், மேல்சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறி உள்ளனர்.
ஆனால், வழியிலேயே ஜாகீராவும், வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் தான் ஜாகீராவும், சிசுவும் இறந்துவிட்டதாக அவரது தாய் நபீலா, தம்பி நசரின் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்; உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
காலை 6:00 மணி அளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தோம். செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். 10:00 மணி வரை டாக்டர்கள் வரவில்லை.
ஜாகீராவுக்கு திடீரென மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால், அவரது வயிற்றைப் பிடித்து செவிலியர்கள் அமுக்கினர். திடீரென ஆம்புலன்சில் ஏற்றி துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
பரிசோதித்த டாக்டர்கள், பெண்ணுடன் சேர்ந்து குழந்தையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபோன்ற நிலைமை யாருக்கும் நடக்கக்கூடாது. மூன்று செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஜாகீராவின் கணவர் கோபியை தனியே அழைத்துச் சென்று பேசிய போலீசார், உடலை பெற்றுக் கொள்வதாக கையெழுத்து வாங்கி அனுப்பி விட்டனர்.
கலெக்டரின் சிறப்பு உத்தரவின் அடிப்படையில், ஜாகீராவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை டாக்டர்கள் ராமலட்சுமி, விக்னேஷ்வரமூர்த்தி ஆகியோர் பணியில் இருந்தனர்.
ஜாகீராவின் பனிக்குடம் உடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.