ADDED : ஜூன் 14, 2024 02:58 AM
சென்னை:கோயில்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை, நேரடி நியமனம் வழியாக நிரப்ப, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக, துறை கமிஷனர் முரளீதரன், அனைத்து கோயில் செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியிட பட்டியலில், காலியாக உள்ள காவலர் பணியிடங்களை, விதிமுறைகளின்படி நேரடி நியமனம் வழியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, 2021 ஜூன் 21ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், காலி பணியிடங்களை நிரப்ப, கமிஷனர் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அந்த நிபந்தனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பணியிட பட்டியலில், காலியாக உள்ள காவலர் பணியிடங்களை மட்டும், நேரடி நியமனம் வழியாக நிரப்ப, கோயில் நிர்வாகங்களுக்கு பொது அனுமதியளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர அறிவிப்பை, சட்ட விதிகளின்படி ஜூன் 21ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விளம்பர அறிவிப்பு செய்யப்பட்ட விபரத்தை உடனடியாக கமிஷனர் அலுவலகத்திற்கு, மண்டல இணை ஆணையர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

