முயற்சி தோற்றாலும், பாசம் வென்றது பசுவை காப்பாற்ற முயன்ற நாயும் பலி
முயற்சி தோற்றாலும், பாசம் வென்றது பசுவை காப்பாற்ற முயன்ற நாயும் பலி
ADDED : ஜூன் 22, 2024 01:18 AM

திருவள்ளூர்:மின்கம்பியில் சிக்கிய பசுவை காப்பாற்ற சென்ற வளர்ப்பு நாயும் பலியான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ஆர்.ஜே.கண்டிகை கிராமம். இப்பகுதியினர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்தன், ஐந்து பசுக்களை வளர்த்து வருகிறார். நாட்டு நாய் ஒன்றும் இவரது வீட்டில் வளர்ந்து வந்தது.
மாடுகளுடன் நட்புடன் நாய் பழகி வந்தது. மாடுகள் தினசரி மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு செல்லும் போது நாயும் அவற்றுடன் சென்று திரும்பும்.
இந்நிலையில், ஆர்.ஜே.கண்டிகை பகுதியில் புதிய மின்தட பாதை அமைக்கப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இந்த மின்தட பாதையில் இருந்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது. அறுந்து விழுந்த இடத்தில் ஆனந்தன் வீட்டு பசு ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது.
மின் தாக்குதலுக்கு உள்ளான பசு, அலறி துடித்தது. அருகில் இருந்த வளர்ப்பு நாய் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. நட்புடன் பழகி வந்த பசு துடிப்பதை கண்டு, உதவிக்கு ஓடியது.
பசுவின் மீது விழுந்து கிடந்த மின்கம்பி தான் பசுவின் வேதனைக்கு காரணம் என உணர்ந்தது போல், அதை வாயால் கவ்வி இழுக்க முயற்சித்தது. ஆனால், மின்தாக்குதலுக்கு உள்ளான நாயும், பசுவும் சம்பவ இடத்திலேயே பலியாகின.
மின்கம்பி அறுந்து விழுந்ததில் தான் பசு துடிக்கிறது என உணர்ந்தும், சற்றும் தாமதிக்காமல் அதை விலக்கி விட துணிந்து செயல்பட்ட நாயின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனாலும், நட்புக்காக தன் உயிரை பொருட்படுத்தாமல் செயல்பட்ட நாயின் பாசம் வெற்றி பெற்றதாகவே கிராமத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

