மதுரவாயலில் கார் ஓட்டுனர் மரணத்தில் திருப்பம் போலீஸ் ஏட்டு தாக்கியதில் உயிரிழந்தது அம்பலம்
மதுரவாயலில் கார் ஓட்டுனர் மரணத்தில் திருப்பம் போலீஸ் ஏட்டு தாக்கியதில் உயிரிழந்தது அம்பலம்
ADDED : மார் 24, 2024 01:35 AM
சென்னை:மதுரவாயல் அணுகுசாலையில் வலிப்பு வந்து உயிரிழந்ததாக கருதப்பட்ட கார் ஓட்டுனரின் மரணத்தில், திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை தாக்கிய மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, மதுரவாயலில் கடந்த 21ம் தேதி இரவு கார் ஓட்டுனர் ஒருவர் வலிப்பு வந்து இறந்து கிடப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, பெண் ஒருவர் தெரிவித்தார். போலீசார், உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இயற்கை மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
சந்தேகம்
பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் உறவினர்களிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜ்குமார் சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது அண்ணன் ஜெயகுமார், 47, போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், போலீஸ்காரர் ஒருவர் தாக்கியதில் அவர் உயிர்இழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணை யில் தெரிய வந்ததாவது:
சென்னை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 39. திருமணமாகாத இவர், முகப்பேரில் உள்ள கார்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
முறையாக தவணை செலுத்தாத கார்களை, பறிமுதல் செய்து வரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 21ம் தேதி இரவு 8:00 மணியளவில் தனக்கு தெரிந்த மதுரவாயலைச் சேர்ந்த 36 வயது பெண்ணுடன், மதுரவாயல், ஜீசஸ் கால்ஸ் அருகே அணுகுசாலையில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
தகராறு
இந்த பகுதியில், இரவு வேளைகளில் திருநங்கையர் நடமாட்டம் மற்றும் சமூக விரோத செயல்கள் நடப்பது வாடிக்கை.
அப்போது, மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலராக பணி புரியும், கொரட்டூரைச் சேர்ந்த ரிஸ்வான், 48, என்பவர், இரவு பணிக்கு செல்ல அவ்வழியாக வந்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் அமர்ந்திருந்த ராஜ்குமார் மற்றும் அப்பெண்ணை வெளியே வருமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக, ராஜ்குமாருக்கும் ரிஷ்வானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், போலீஸ்காரர் ரிஸ்வான் தாக்கியதில் வலிப்பு வந்து, சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து, ராஜ்குமாருடன் இருந்த பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜ்குமாருடன் இருந்த பெண்ணிடம், 'நடந்த சம்பவம் குறித்து யாரிடவும் பேசக்கூடாது; உடனே அங்கிருந்து செல்ல வேண்டும்' என, ரிஸ்வான் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி, தலைமை காவலர் ரிஸ்வானை மதுரவாயல் போலீசார் நேற்று கைது செய்தனர்.

