சினிமா தயாரிக்க ரூ.40 கோடி; ஜாபர் சாதிக் தந்தது அம்பலம்
சினிமா தயாரிக்க ரூ.40 கோடி; ஜாபர் சாதிக் தந்தது அம்பலம்
ADDED : ஏப் 14, 2024 03:50 AM
சென்னை: தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஹோட்டல் அதிபர் இர்பான் புஹாரி, மார்க்க நெறியாளர் என கூறப்படும் அப்துல் பாஷித் புஹாரி உள்ளிட்டோர், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, ஏப்., 9ல், சென்னை, மதுரை, திருச்சியில் உள்ள, ஜாபர் சாதிக், அமீர், இர்பான் புஹாரி உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் என, 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளனர்.
அமலாக்கத் துறையினர் கூறியதாவது:
போதைப்பொருள் கடத்தல் வாயிலாக கிடைத்த தொகையில், சினிமா தயாரிக்க, ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக, நேரடி ரொக்கமாக, இரு தவணைகளில், 6 மற்றும், 12 கோடி ரூபாய் வழங்கி உள்ளார் என்பதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவரது வங்கி இருப்பில், 21 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அதை முடக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

