ரியல் எஸ்டேட் சட்டத்துக்கேற்ப பொது கட்டட விதிகளில் திருத்தம்
ரியல் எஸ்டேட் சட்டத்துக்கேற்ப பொது கட்டட விதிகளில் திருத்தம்
ADDED : ஆக 12, 2024 04:52 AM
சென்னை : ரியல் எஸ்டேட் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில், பொது கட்டட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வீடுகள், மனைகள் விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், 2016ல் நிறைவேற்றப்பட்டது.
இதை அமல்படுத்த, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும், மேல் முறையீட்டு தீர்ப்பாயமும், 2017ல் ஏற்படுத்தப் பட்டன.
இதுதொடர்பான விதிகளை, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 2017ல் வெளியிட்டது. அதன்படி, 5,381 சதுரடி அல்லது எட்டு வீடு, மனைகள் உள்ள திட்டங்கள் ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
குறிப்பிட்ட சில பகுதிகளில், 5,381 சதுரடிக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடு, மனைகள் எண்ணிக்கை குறைவு என்று கூறி, ரியல் எஸ்டேட் சட்ட வரம்பில் இருந்து, சிலர் தப்பிக்க முயற்சித்தனர்.
இது தொடர்பான வழக்குகளில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அந்த உத்தரவில், வீடுகள், மனைகள் எண்ணிக்கையை மட்டும் வரம்பாக பார்க்க முடியாது; திட்டம் செயல்படுத்தப்படும் மொத்த நிலப்பரப்பு, 5,381 சதுரடி; அதற்கு மேல் இருந்தால், அத்திட்டம் ரியல் எஸ்டேட் சட்டத்துக்கு உட்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்புகளை, ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டது. இந்த மாற்றங்களை பொது கட்டட விதிகளில் சேர்ப்பது அவசியம். ரியல் எஸ்டேட் ஆணைய பரிந்துரை அடிப்படையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, இதற்கான பணிகளை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொது கட்டட விதிகளில் தேவைக்கேற்ப, உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ரியல் எஸ்டேட் சட்டத்தில் வழங்கப்பட்ட தெளிவுரைக்கு ஏற்ப, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கட்டட பணி நிறைவு சான்று பெற வரும் விண்ணப்பங்களில், ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று பார்ப்பது அவசியம்.
இதற்காக உரிய பிரிவுகளை மாற்ற, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., ஆகிய வற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.