ADDED : மார் 29, 2024 09:34 PM
சென்னை:வாரிசு சான்றிதழ் பெறுவது தொடர்பான அரசாணையில், திருமணமாகாத நபரின் இரண்டாம் நிலை வாரிசுகள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சொத்து வைத்துள்ள நபர்கள் இறந்தால், அவரது சொத்தை வாரிசுகள் பெற, வாரிசு சான்றிதழ் அவசியம். இதை, வருவாய்த் துறைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்.
ஆன்லைன் முறையில் வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, ஒரு நபரின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என்பது குறித்த வரையறை தயாரிக்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய அரசாணையை, 2022ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டது.
இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என்பதற்கான வரையறையில், ஹிந்து வாரிசுரிமை சட்டத்தின் விதிமுறைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாரிசு சான்றிதழில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், வாரிசு சான்றிதழ் தொடர்பான அரசாணையில், உரிய திருத்தங்கள் செய்து, புதிய ஆணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

