2019 தேர்தலை விட கூடுதலாக 14.34 லட்சம் பேர் ஓட்டளிப்பு
2019 தேர்தலை விட கூடுதலாக 14.34 லட்சம் பேர் ஓட்டளிப்பு
UPDATED : ஏப் 22, 2024 08:08 AM
ADDED : ஏப் 22, 2024 06:28 AM

சென்னை : தமிழகத்தில் 2019 லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 சதவீதம் குறைந்திருந்தாலும், கூடுதலாக 14.34 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.
தமிழகத்தில் 2019 லோக்சபா தேர்தலின்போது, 5.84 கோடி வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அவர்களில், 4.20 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்திருந்தனர். ஓட்டுப்பதிவு 71.90 சதவீதம்.
தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடியாக உயர்ந்தது.
இவர்களில், 3.06 கோடி ஆண்கள்; 3.17 கோடி பெண்கள்; 8,467 மூன்றாம் பாலினத்தவர். முதல் முறை ஓட்டளிக்கும் 18 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டோர், 10 லட்சத்து 92,420 பேர்.
அனைத்து தொகுதிகளுக்கும், கடந்த 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில், 4.35 கோடி பேர் ஓட்டளித்திருந்தனர். ஓட்டுப்பதிவு 69.72 சதவீதம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலைவிட இம்முறை 2 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், ஓட்டளித்த வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலைவிட இம்முறை 14.34 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.

