ஸ்ரீவி., பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
ஸ்ரீவி., பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
ADDED : பிப் 28, 2025 01:35 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில் கொதிக்கும் நெய்யில் மூதாட்டி முத்தம்மாள் 92, கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் சிவராத்திரி நாளான நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. முத்தம்மாள் அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து தன் நெற்றியிலும், பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கும் திருநீருடன் கலந்து பூசினார். பின் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு அதனை கையால் எடுத்து பனை ஓலை பெட்டியில் சேகரித்தார்.
அவருக்கு உதவியாக பூசாரிகள் உடனிருந்தனர்.
பின் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரை, தேனி, சென்னை, பெங்களூரு, டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். 52 ஆண்டுகளுக்கு மேலாக முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடுவது பக்தர்களை பரவசப்படுத்தியது.

