ராமுவுக்கு பிரியாவிடை ; வரகளியாறு முகாமில் உயிரிழந்த யானைக்கு அஞ்சலி
ராமுவுக்கு பிரியாவிடை ; வரகளியாறு முகாமில் உயிரிழந்த யானைக்கு அஞ்சலி
UPDATED : பிப் 10, 2025 01:01 PM
ADDED : பிப் 10, 2025 12:07 PM

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் வரகளியாறு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 55 வயதான ராமு என்ற யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு, பின்னர் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கும்கி யானைகளாக மாற்ற பயிற்சி வழங்கப்படும். அப்படித்தான் கடந்த 1978ம் ஆண்டு கன்னியாகுமரி வனப்பகுதியில் பிடிபட்டு வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்த யானை தான் ராமு. ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியாறு யானை முகாமில் 55 வயது யானை 'ராமு' பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த இரு தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அரசு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நீர்ச்சத்து குறைபாடு, செரிமானக் கோளாறு, பல்லில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்தது தெரிய வந்தது.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்தது. யானைக்கு வனத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முறைப்படி, அடக்கம் செய்வதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

