பட்டியலின சமுதாயம் பா.ம.க.,வுக்கு ஆதரவளித்தால் தலித் தான் முதல்வர் அடித்து சொல்கிறார் அன்புமணி
பட்டியலின சமுதாயம் பா.ம.க.,வுக்கு ஆதரவளித்தால் தலித் தான் முதல்வர் அடித்து சொல்கிறார் அன்புமணி
ADDED : ஆக 15, 2024 07:49 PM

மரக்காணம்:''தமிழகத்தில் பட்டியலின சமுதாயம் பா.ம.க.,விற்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை முதல்வர் ஆக்குவோம்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். கூட்டத்தில், கீழ்சிவிரி அடுத்த பிரம்மதேசத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும். கீழ்சிவிரி கிராமத்தை திண்டிவனம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின் அன்புமணி அளித்த பேட்டி:
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து, 78 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரம்.
தமிழகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். மதுவால் வரும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தும் நிலை உள்ளது.
தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. இவற்றை கட்டுப்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன். மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
மதுக்கடைகளை மூடுவதற்கு ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். தேர்தல் அரசியலை மட்டும் பார்த்து அரசியல் செய்யக்கூடாது. 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் பட்டியலின சமுதாயம் பா.ம.க.,விற்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை முதல்வர் ஆக்குவோம். தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை, 1998ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பா.ம.க., தான்.
இவ்வாறு அவர் கூறினார்.