ADDED : மே 04, 2024 12:31 AM
சென்னை:'தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'ஆட்சிக்கு வந்ததும், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம்' என்று அறிவித்து விட்டு, இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக, 2022ல் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 600 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணானது. அதற்கு பிறகும், தி.மு.க., அரசு சுதாரிக்கவில்லை.
காவிரி நீரில், தமிழகத்தின் உரிமையை கர்நாடகா அரசிடம் அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர் நிலைகளை சுரண்டி கொண்டிருக்கின்றனர் தி.மு.க.,வினர்.
கோடை காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது முதல்வருக்கோ, தி.மு.க., அமைச்சர்களுக்கோ தெரியாதா? மழை நீரை சேகரிக்க நீர் நிலைகளை துார் வாருவதிலும், சீரமைப்பதிலும் சிறிது கூட கவனம் செலுத்தாததன் விளைவே, தமிழகம் முழுதும் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையின் அடிப்படை.
எவ்வித தொலைநோக்கு திட்டமும் இல்லாமல், மழை காலத்தில் வெள்ளத்தில் மக்களை தத்தளிக்க விடுவதும், கோடையில் குடிநீர் பற்றாக்குறையில் அல்லல்பட வைப்பதும் தொடர் கதையாகிறது. இதற்கான ஒரு நிரந்தர தீர்வு குறித்து, தி.மு.க., அரசு சிந்திப்பதே இல்லை.
தற்போதைய தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் அதே நேரத்தில், நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நீர் நிலைகளை மீட்கும் நடவடிக்கையும், நீர் நிலைகளை சீரமைக்கும் பணியையும் உடனே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.