லண்டனுக்கு சென்று மாணவரானார் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.,வை வழிநடத்த குழு அமைப்பு
லண்டனுக்கு சென்று மாணவரானார் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.,வை வழிநடத்த குழு அமைப்பு
ADDED : ஆக 30, 2024 09:21 PM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதால், கட்சிப் பணிகளை கவனிக்க, மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில், ஆறு பேர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண்சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில், பிரிட்டனில் நடக்கும் கல்வி பயிற்சித் திட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். மாநிலத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தேசியத் தலைவர் நட்டா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநிலப் பொதுச்செயலர்கள் கருப்பு முருகானந்தம், சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இக்குழுவினர், மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்தாலோசித்து, கட்சி சார்ந்த முடிவுகளை எடுப்பர். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப, ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத படிப்புக்காக சென்றுள்ளார். மூன்று மாதங்களுக்கு மாநிலத் தலைவர் இருக்க மாட்டார் என்பதால், கட்சிப் பணிகளை மேற்கொள்ள, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர் பொறுப்பு தலைவராக நியமிக்கப்படலாம் அல்லது செயல் தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.
கடந்த 2019ல் தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப் பட்டார். அதன்பின், 8 மாதங்களுக்குப் பின்னரே, எல்,முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப் பட்டார். அதுவரை மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் கட்சிப் பணிகளை கவனித்தார்.
அதேபோல அண்ணாமலை இல்லாத மூன்று மாதங்களும், அமைப்பு பொதுச்செயலரே கட்சிப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்., பின்னணி
ஆனால், மூத்த தலைவர் ராஜா தலைமையில் ஆறு பேர் குழுவை, பா.ஜ., மேலிடம் அமைத்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றியவர்கள். நீண்ட காலமாக பா.ஜ.,வில் இருப்பவர்கள்.
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நாளை துவங்குகிறது. நாளை மறுநாள், தமிழகத்தில் முதல் பா.ஜ., உறுப்பினராக ஹெச்.ராஜா இணைவார் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருடைய தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கிளை, மண்டல், மாவட்ட தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேர்தலை நடத்தும் பொறுப்பும், இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.