ADDED : மார் 02, 2025 04:59 AM

தனிமையில் உள்ள முதியோர் ஆண், பெண் யாராக இருந்தாலும் இரண்டாம் திருமணம் அவசியமான ஒன்று; அதில் தவறில்லை என்கின்றனர், உளவியல் மருத்துவர்கள்.
பொதுவாக, 50 வயதை கடப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது தனிமை. குடும்பம், பிள்ளைகள், வேலை, என பொறுப்புகளை சுமந்து ஓடிய கால்கள், சற்று தளர்ந்து ஓய்வு எடுக்க துவங்கும் போது, ஆரோக்கியம், உறவுகள், வாழ்க்கை முறை, சமூகம் என அனைத்திலும் மாற்றங்களை உணரத்துவங்குகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் தம் பார்ட்னர் உடன் இருப்பவர்கள், தனிமை என்ற சிக்கலில் இருந்து மீண்டு வந்துவிடுகின்றனர். ஆனால், கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனும், நாட்களை நகர்த்தி செல்வதில், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
உளவியல் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
முதுமை வயதில் தனிமை உணர்பவர்களுக்கு, திருமணம் தேவை. ஆனால், அதில் சற்று கவனம் அவசியம். துணை இறந்து தனிமை உணர்பவர்களுக்கும், விவாகரத்து பெற்று தனியாக இருப்பவர்களுக்கும், வித்தியாசம் உண்டு. விவாகரத்து பெற்றவர்கள் புதிய உறவுகளால் சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.
முதுமையில் திருமணம் செய்வதில், எந்த தவறும் இல்லை. ஆனால், தேவைதானா, நமக்கான சூழல், புதிதாக வரும் உறவின் குடும்ப சூழல் அனைத்திலும் புரிதல் இருக்க வேண்டும். பொதுவாக வயதானால், பொறுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்துவிடும். இதுபோன்ற சூழலில், திருமணம் செய்யும் போது தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
துணை இழந்த முதியவர்கள் உள்ள வீடுகளில், பிள்ளைகள் உடன் இல்லாத போது, இதுபோன்ற திருமணங்கள் வரவேற்கக்கூடியதே.
இவ்வாறு, அவர் கூறினார்.