நகை செய்து தருவதாக கூறி ரூ.74.75 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
நகை செய்து தருவதாக கூறி ரூ.74.75 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : பிப் 23, 2025 02:24 AM

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஜவுளி வியாபாரி சுந்தரிடம் 40,நகைகள் செய்து தருவதாக கூறி ரூ.74.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைதான நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை தெய்வீக மோகன் என்ற வெற்றிவேல் 51, போலீசாரால் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியில் ஜவுளிகடை நடத்தி வருபவர் சுந்தர். இவரது ஜவுளி கடையில் அதே பகுதியை சேர்ந்த ரேவதி, இவரது மகள் பூமிகா ஜவுளி வாங்கி சில்லரை வியாபாரம் செய்தனர். இவர்கள் மூலம் திண்டுக்கலை சேர்ந்த வீரன், சுந்தரிடம் அறிமுகமானார். அவர் வெற்றிவேல் என்பவர் தங்க பிஸ்கட்கள் வைத்துள்ளார், அதனை வாங்கி ஆசாரி பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து புதிய டிசைன்களில் நகைகள் செய்யலாம் என்றார். தங்க பிஸ்கட்கள், நகைகள் டிசைன்களை அலைபேசியில் காட்டினார்.
இதனை நம்பி சுந்தர் பணம் ரூ.74.75 லட்சத்தை 5 பேரின் வங்கி கணக்குகளுக்கும், ரொக்கமாகவும் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்டு 5 பேரும் ஏமாற்றினர்.
சுந்தர் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அதன் பேரில் ரேவதி, அவரது மகள் பூமிகா, வீரன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியம் ஆகிய ஐவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் வீரன், ரேவதியை கடந்த மாதம் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய தெய்வீகமோகன் என்ற வெற்றிவேலை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

