மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு'
மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு'
ADDED : பிப் 15, 2025 12:56 AM

சென்னை:முத்திரை தாள் கட்டணத்தை குறைத்து வசூலித்து, அரசுக்கு, 1.34 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
திருப்பத்துார் மாவட்ட பதிவாளராக பணிபுரிந்து வருபவர் செந்துாரபாண்டியன். இவர், சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டு சார் - பதிவாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது, பத்திரப்பதிவுக்கான முத்திரை தாள் கட்டணத்தை குறைவாக வசூலித்து, அரசுக்கு 1.34 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, செந்துாரபாண்டியனுக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர். ஆஜராகாததால், சென்னை மதுரவாயல் அருகே, நுாம்பல் ஐ.சி.எல்., ேஹாம் டவுன் பகுதியில் உள்ள செந்துார பாண்டியன் சொகுசு பங்களாவில், டி.எஸ்.பி., கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று ஆறு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.
போலீசார் சோதனையிட சென்ற போது, செந்துாரபாண்டியன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வீட்டில் இல்லை. இதனால், அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் கதவுகள் திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல, செந்துாரபாண்டியன் வீட்டிற்கு எதிரே, அவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அதன் சாவி செந்துாரபாண்டியனிடம் உள்ளது. அதனால், சாவி செய்பவரை வரவழைத்து, மாற்றுச்சாவி வாயிலாக குடோன் திறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், பல முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

