ADDED : ஆக 07, 2024 02:00 AM
சென்னை:சர்வதேச நிலவரங்களால், கடந்த மாதத்தில் நாட்டில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.
தமிழகத்தில் கடந்த, 17ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,360 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனால் அடுத்த சில தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு, 3,000 ரூபாய் வரை குறைந்தது. கடந்த வாரம் தங்கம் விலை சற்று உயர்ந்தது. நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,470 ரூபாய்க்கும்; சவரன், 51,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 91 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 6,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 51,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 3.50 ரூபாய் குறைந்து, 87.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.