ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

சென்னை: தமிழகத்தில், வீட்டு மனைகள் வாங்குவதில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதற்காக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
முறையான அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விற்க, தமிழக அரசு, 2017ல் தடை விதித்தது. இது தொடர்பான பத்திரப்பதிவும் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், சில நிறுவனங்கள், மனைப்பிரிவில் பொது பயன்பாட்டுக் கான இடங்களையும் சேர்த்து விற்பதாக புகார் கூறப்படுகிறது.
இதைத்தடுக்க, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சார்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு வரைபடங்களை, மக்கள் எளிதாக ஆய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டு மனைகள் விற்பனையில், அதன் அங்கீகாரம் உள்ளிட்ட துல்லியமான தகவல்களை மக்கள் எளிதாக ஆய்வு செய்ய, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில், ஒற்றை சாளர முறையில் அங்கீகாரம் வழங்கப்படும் மனைப்பிரிவுகளின் இருப்பிட விபரங்கள், ஜி.பி.எஸ்., எனப்படும், புவிசார் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைத்து வழங்கப்படும்.
இதனால், அங்கீகார எண் அல்லது சர்வே எண்ணை பயன்படுத்தி, மக்கள் அந்த மனைப்பிரிவு எங்கு அமைந்துள்ளது என்பதை எளிதாக அறியலாம்.
அங்கீகார வரைபடத்துடன், சாலை மற்றும் பொது இடங்கள், வழிகாட்டி மதிப்பு, பரப்பளவு போன்ற பல்வேறு விபரங்களை மக்கள் எளிதாக பார்க்க இது வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

