'வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர்' படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
'வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர்' படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 19, 2024 01:28 AM
சென்னை:மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் நடத்தும், 'வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர்' படிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய மீன்வளத் துறையின்கீழ் செயல்படும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆழ்கடலில் மீன்பிடிக்கவும், வணிகக் கப்பல்களில் பொறியாளர்கள், தலைமைப் பொறுப்பில் பணியாற்றவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வெசல் நேவிகேட்டர் மற்றும் மரைன் பிட்டர் பணியிடங்களுக்காக இரண்டு ஆண்டுகள் அளிக்கப்படும் பயிற்சிக்கு, 'வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான பொது இயக்குனரகம்' அங்கீகாரம் அளித்துள்ளது. இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் அரசு உதவித் தொகையுடன், தங்கும் விடுதி வசதியும் அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில், 40 சதவீத மதிப்பெண் பெற்ற, 15 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம், எண் 59, எஸ்.என். செட்டி தெரு, ராயபுரம், சென்னை - 600013' என்ற முகவரியில் நேரிலோ அல்லது www.cifnet.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ் ஜூன் 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

