ADDED : ஆக 30, 2024 02:36 AM

சென்னை:சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்த நிகழ்வில், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான, 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, பணி நியமன ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 'உபரி உணவை வீணாக்காமல் தடுத்தல்' திட்டம், ஒரு முறை உபயோகித்த எண்ணெயை மறுமுறை உபயோகம் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு; உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் சரியாக தகவல் இருப்பதை உறுதி செய்வது போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
உணவு பாதுகாப்பு துறை சார்பில், 'ஹிட் ரைட் சேலஞ்ச்' போன்ற, பல விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், மத்திய அரசு விருதுகளையும், பரிசுகளையும் தமிழகம் பெற்றுள்ளது.
தற்போது, உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டதால், இத்துறை பணிகள் மேலும் விரைவாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதார அலுவலர்கள், 1,066 பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், 38 வழக்குகள் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காலியாக உள்ள, 26 முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
- சுப்ரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

