சீருடை பணியாளர் வாரிய தலைவர் நியமனம்: அ.தி.மு.க., நிர்வாகி வழக்கு
சீருடை பணியாளர் வாரிய தலைவர் நியமனம்: அ.தி.மு.க., நிர்வாகி வழக்கு
ADDED : ஆக 30, 2024 02:11 AM
சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பொருத்தமற்றது
இதுதொடர்பாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனு:
சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; விண்ணப்பங்கள் வெளிப்படையாக வரவேற்கப்படவில்லை. சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவரின் பணியை ஒழுங்குபடுத்த எந்த விதிகளும் இல்லாததால், ஓய்வு பெற்றவரை நியமிப்பது பொருத்தமற்றது.
தமிழகத்தில், டி.ஜி.பி., அந்தஸ்தில், 16 அதிகாரிகள் உள்ளனர். அதனால், தகுதியானவர்களுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை.
தகுதியானவர்கள் போதிய எண்ணிக்கையில் இருக்கும் போது, டி.ஜி.பி., சீமா அகர்வாலை, வாரியத்தின் தலைவராக நியமித்தனர்.
திடீரென அவரை இடமாற்றம் செய்து, அந்த பதவியில் சுனில்குமாரை நியமிப்பதற்காக, செயற்கையாக காலியிடத்தை உருவாக்கினர்.
அவருக்கு சாதகம் செய்யவே, இந்த இடமாற்றம் நடந்துள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை.
குறிப்பிட்ட விதிகள் இருந்தால் ஒழிய, ஓய்வுபெற்ற அதிகாரியை மீண்டும் நியமிக்க முடியாது.
ஓய்வு அதிகாரிகளை நியமித்தால், பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவர்.
தடை விதியுங்க@@
எனவே, சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.
அவரை நியமித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். வாரிய தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

