ADDED : ஏப் 05, 2024 09:46 PM
சென்னை:அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதுாறு வழக்கில், 'யு டியூபர்' ஜோ மைக்கேல் பிரவீன், 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி. திருநங்கையான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 'யு டியூபர்' ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
நஷ்டஈடு
அதில், 'ஜோ மைக்கேல் பிரவீன், அவரின் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளிக்காத காரணத்தால், எனக்கு எதிராக அவதுாறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஆதாரமின்றி எனக்கு எதிராக அவதுாறு வீடியோக்களை வெளியிட்ட ஜோ மைக்கேல் பிரவீன், 1.25 கோடி ரூபாய் மான நஷ்டஈடாக வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், 'எதிர்மனுதாரர் தன் யு டியூப் சேனலில், மனுதாரரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அவதுாறான கருத்துக்கள் கொண்ட வீடியோக்களை பதிவிட்டது தெரியவருகிறது. எனவே, 50 லட்சம் ரூபாயை, இழப்பீடாக எதிர்மனுதாரர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், தன் தரப்பு விளக்கம் எதையும் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஜோ மைக்கேல் பிரவீன் மனு தாக்கல் செய்தார்.
ஆதாரங்கள் தாக்கல்
'வழக்கு தொடர்ந்தது; நோட்டீஸ் அனுப்பப்பட்டது போன்ற விபரங்கள், எதிர்மனுதாரர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும்' எனக்கூறி, அதற்கான ஆதாரங்கள், அப்சரா ரெட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இதை ஆய்வு செய்த நீதிபதி என்.சதீஷ்குமார், ''மனுதாரர் அப்சரா ரெட்டிக்கு, 50 லட்சம் ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது,'' என்று கூறி, ஜோ மைக்கேல் பிரவீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

