1,000 ஆண்டுகள் பழமையான மரங்களின் நிலை ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை
1,000 ஆண்டுகள் பழமையான மரங்களின் நிலை ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை
ADDED : மார் 07, 2025 12:34 AM

துாத்துக்குடி:''துாத்துக்குடி மாவட்டத்தில் காணப்படும் 1,000 ஆண்டுகள் பழமையான மரங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்,'' என தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டத்தில் சாமிநத்தம், குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், செட்டிமல்லன்பட்டி, துாத்துக்குடி நகர் பகுதி என, 10க்கும் மேற்பட்ட இடங்களில் பழமையான மரங்கள் உள்ளன.
பல்நோக்கு மரம்
அவை 1,000 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. பப்பரபுளி, பெருமரன், கற்பக விருட்சம் என அழைக்கப்படும் அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி கூறியதாவது:
பாபாப் மரங்கள், ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த மரங்கள், துாத்துக்குடி மாவட்டத்தில் 10க்கும் அதிகமாக உள்ளன; விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
பாபாப் ஒரு பல்நோக்கு மரமாகும். உணவு, உடை மற்றும் மருந்து என பல பயனுள்ள பொருட்களுக்கான மூலப்பொருட்களை இந்த மரங்கள் வழங்குகின்றன.
புரதச்சத்து
பழக்கூழ், விதைகள், இலைகள், பூக்கள், வேர்கள், பட்டை ஆகியவை உண்ணக் கூடியவை.
இம்மரங்களின் பழக்கூழில், மிக அதிக வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், புரதங்கள் உள்ளன. அவை சுவையூட்டியாக பயன்படுகின்றன.
இம்மரங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.