ADDED : மார் 24, 2024 02:27 AM
சென்னை:கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் குறித்து, காவல் துறையிடம் புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது.
இச்செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன், கடந்த 10ம் தேதி மதுரை போலீஸ் எஸ்.பி., மற்றும் தென் மண்டல காவல் துறை தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, கடந்த 14ம் தேதி காலை 11:00 மணிக்கு, காரில் வந்த மர்ம கும்பல், ஆதிநாராயணன் வாகனத்தை சேதப்படுத்தி, வெடிகுண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
போதை வியாபாரிகள் குறித்து அளித்த புகார் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்கு உள்ளான மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை கைது செய்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி யாலும், அவரது லோக்சபா பொதுத்தேர்தல் பணிகளை முடக்கும் விதமாகவும், அடக்குமுறையை கையாண்டு கைது செய்து, 15 நாள் காவலில் வைத்துள்ள, தி.மு.க., அரசின் காவல் துறை செயல் கண்டிக்கத்தக்கது.
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்களையும், மருது சேனை தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்யவும், சிறையில் உள்ள ஆதிநாராயணனை உடனடியாக விடுதலை செய்யவும் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு, பழனிசாமி கூறியுள்ளார்.

