ஜாமின் எடுக்காததால் 'மாஜி' கவுன்சிலரை கொன்றோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ஜாமின் எடுக்காததால் 'மாஜி' கவுன்சிலரை கொன்றோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ADDED : ஜூலை 02, 2024 04:51 AM

கடலுார்: ஆடுகள் திருடிய வழக்கில் ஜாமினில் எடுக்காததால், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன்,45; அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான இவரை, கடந்த 29ம் தேதி மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து கடலுார் முதுநகர் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஆலை காலனி முரளி மகன் அஜய்,21; தணிகாசலம் மகன் நேதாஜி,23; பாலன் காலனி சங்கர் மகன் சந்தோஷ்,24; ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள், 3 மொபைல் போன், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்,' புஷ்பநாதன் ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்தார். எங்களிடம் ஆடுகள் திருடி வந்து கொடுத்தால் பணம் தருவதாக கூறினார். அதன்பேரில், கடந்தாண்டு தேவனாம்பட்டிணத்தில் ஆடுகளை திருடி புஷ்பநாதனிடம் கொடுத்தோம். ஆடுகள் திருடியதால் போலீசார் எங்களை கைது செய்தனர்.
ஆனால், புஷ்பநாதன் எங்களை ஜாமினில் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை நோட்டமிட்டு வழிமறித்து வெட்டிக் கொலை செய்தோம்' என கூறியுள்ளனர்.