ADDED : மே 02, 2024 10:16 PM
சென்னை:தமிழக சட்டசபை கூட்டம், அடுத்த மாதம் இறுதியில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 22ம் தேதி வரை நடந்தது. அதன்பின், லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்தது. அடுத்த மாதம் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி சார்பில், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடக்கும். எனவே, ஜூன் மாத இறுதியில், சட்டசபை கூட்டத்தொடரை நடத்த, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் இரு வாரங்கள் நடத்தப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் வெளியிடுவதற்கான புதிய அறிவிப்புகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.