பதவி உயர்வை எதிர்பார்க்கும் உதவி செயற்பொறியாளர்கள்; ஓய்வுபெறும் நேரத்தில் காத்திருக்கும் பரிதாபம்
பதவி உயர்வை எதிர்பார்க்கும் உதவி செயற்பொறியாளர்கள்; ஓய்வுபெறும் நேரத்தில் காத்திருக்கும் பரிதாபம்
ADDED : ஜூலை 05, 2024 11:17 PM
மதுரை: பொதுப்பணித்துறையில் தாமதமாக பதவி உயர்வு பெற்ற உதவிசெயற்பொறியாளர்கள் (ஏ.இ.இ.,) பணிஓய்வு நேரத்தில் செயற்பொறியாளர் பதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் மாநில அளவில் கடந்தாண்டில் 15 செயற்பொறியாளர் (இ.இ.,) காலிப்பணியிடங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது வரை நிரப்பப்படவில்லை. 4 பேர் கண்காணிப்பு பொறியாளர் நிலையில் இருந்து தலைமை பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இன்னும் 11 கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டால் இ.இ., நிலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவர். ஏற்கனவே உள்ள 15 பணியிடத்துடன் கூடுதலாக 11 இ.இ., காலிப்பணியிடங்களாகி விடும் என்பதால் விரைவில் நிரப்பவேண்டும் என்கின்றனர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள்.
அவர்கள் கூறியதாவது:
மாநில அளவில் 60 ஏ.இ.இ.,க்கள் செயற்பொறியாளர் பதவிஉயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்தாண்டில் சிலர் பதவி உயர்வு கிடைக்காமலே ஓய்வு பெற்றனர். இன்னும் சிலர் ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர். உதவி பொறியாளர்களாக இருந்த எங்களுக்கு 2015 முதல் 2021 வரை ஏ.இ.இ., பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது இ.இ., பதவி உயர்வு பட்டியலில் இருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இரண்டு மாதங்களுக்கு மட்டும் பதவி உயர்வுக்கு தடை விதித்து கடந்த டிசம்பரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்களை கடந்தும் எங்களது பதவி உயர்வு புறக்கணிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு முன்பாக தகுதியானவர்களுக்கு இ.இ., பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.