17 வயதில் சிறுவிமானம் இயக்கி கேரளாவை சேர்ந்த சிறுவன் சாதனை!
17 வயதில் சிறுவிமானம் இயக்கி கேரளாவை சேர்ந்த சிறுவன் சாதனை!
ADDED : செப் 05, 2024 07:07 AM
பாலக்காடு: பாலக்காட்டை சேர்ந்த, 17- வயது சிறுவன், வட ஆப்பிரிக்கா துனிசியாவில் சிறு விமானத்தை இயக்கி சாதித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பறளி கிணாவல்லூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் - -சரிதா தம்பதியரின் மகன் கண்ணன், 17.
பிளஸ் 2 படித்து முடிந்த இவர், திருச்சூரை மையமாகக் கொண்டும் பறக்கும் அகாடமியில் வணிக பிரிவு பைலட் பயிற்சி கற்று வருகிறார்.
இந்நிலையில், அகாடமியில் சேர்ந்து சில மாதங்களுக்குள் விமானத்தை இயக்கி 'இளைய மாணவர் விமானி' என்ற சான்றிதழ் பெற்று சாதித்து காட்டியுள்ளார்.
கண்ணன் கூறியதாவது:
வானிலை ஆய்வு, ஏர் ரெகுலேஷன், ஏர் நேவிகேஷன் ஆகிய மூன்று தாள்களில் உள்ள தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே பைலட் பயிற்சிக்கு அனுமதி கிடைக்கும். கிளாஸ் -1, கிளாஸ்- 2 என இரு பிரிவுகளில் உள்ள மருத்துவ பரிசோதனையிலும் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சியின் போது, திறமையை கண்டு அகாடமியின் கேப்டன் விகாஸ் விக்ரம்தாஸ், வட ஆப்பிரிக்காவில் துனிசியாவில் உள்ள 'சேப் பிளைட் அகாடமி'க்கு விமானத்தை இயக்கும் பயிற்சிக்கு பரிந்துரை செய்தார். இந்த அகாடமி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் விமானம் இயக்கும் பயிற்சியளிக்கிறது. 45 நாள் பயிற்சி காலம் முடிந்து, கடந்த, ஆக., 24ம் தேதி 'டைமண்ட் பி.ஏ., 40' என்ற நான்கு இருக்கைகள் உள்ள சிறு விமானத்தை வெற்றிகரமாக இயக்கினேன்.
இதன் வாயிலாக துனிசியாவில் விமானத்தை ஓட்டும் இந்திய இளம் சிறுவன் என்ற சான்றிதழ் கிடைத்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.