'முதல்வர் ஸ்டாலின் பற்றி எவன் பேசினாலும் அட்டாக் பண்ணுங்க'
'முதல்வர் ஸ்டாலின் பற்றி எவன் பேசினாலும் அட்டாக் பண்ணுங்க'
ADDED : பிப் 23, 2025 05:13 AM

துாத்துக்குடி: ''முதல்வர் குறித்து அவதுாறாக பேசும் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினரை அடித்தாலும் சரிதான்; விரட்டினாலும் சரிதான் என, துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடியில் நடந்த தி.மு.க., வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தி.மு.க., தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தோல்வியை சந்தித்ததில்லை. இப்படியொரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை.
தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு திட்டம் வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அனைவருக்கும் திட்டங்கள் தீட்டி செயல்படுவதால், அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி பேச்செல்லாம் விறுவிறுப்பாக நடக்கப் போகிறது. தி.மு.க., கூட்டணி குறித்து, கட்சி மேலிடத்தில் பேசிக் கொள்வர். தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு எல்லாவற்றையும் முதல்வர் பார்த்துக் கொள்வார்.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வரும் முதல்வருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில், பா.ஜ.,வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அதை அனுமதிக்க முடியாது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு 40 வயது கூட இருக்காது. ஆனால், தமிழக அரசியலில் பழுத்த அரசியல்வாதியாக இருக்கும் நம் முதல்வரைப் பார்த்து தேவையில்லாமல் பேசி வருகிறார். துணை முதல்வர் உதயநிதியையும் விமர்சிக்கிறார். உச்ச பட்சமாக, 'கெட்-அவுட் ஸ்டாலின்' என டுவிட் போட்டு, அதை 'டிரெண்டிங்' ஆக்குகிறார்.
இதைச் சொல்லக் கூட எனக்கு பிடிக்கவில்லை. அப்படியொரு அருவருப்பான காரியத்தை அண்ணாமலை செய்திருக்கிறார். அதற்கு தி.மு.க., தரப்பில் ரியாக்ஷன் எதுவும் இல்லை. கட்சியின் உண்மையான தொண்டர்கள், தி.மு.க.,வை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இனி, எவன் தி.மு.க.,வையோ, முதல் வரையோ பற்றி பேசினால், நேரடியாக 'அட்டாக்' பண்ணுங்கள் அவனை அடித்தாலும் சரி; விரட்டினாலும் சரி... எப்படியோ செய்யுங்கள். உங்க ஆக்ஷ னுக்குப் பின், மறுபேச்சு பேசக்கூடாது.
மிசா காலத்தையே பார்த்தவர்கள் நாம். தி.மு.க.,வில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் துணிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

