அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
ADDED : மார் 12, 2025 12:48 PM
துர்க்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா வீட்டில் சோதனை நடத்திய, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சத்தீஸ்கரில், 2019 - 22 வரை, காங்., மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் முதல்வராக பதவி வகித்தார். அப்போது, மது விற்பனையில், 4,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இதற்கு, பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா மூளையாகச் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து வழக்குப் பதிந்த அமலாக்கத் துறையினர், துர்க் மாவட்டத்தின் பிலாய் என்ற பகுதியில் உள்ள பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா வீடு உள்ளிட்ட இடங்களில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், 30லட்சம் ரொக்கம், சில குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ரெய்டு குறித்த தகவலை அறிந்த காங்., தொண்டர்கள், சைதன்யா வீட்டின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து, அமலாக்கத் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் சென்றனர். அப்போது, ஒரு வாகனத்தை முற்றுகையிட்ட 20க்கும் மேற்பட்டோர், கற்களை வீசி தாக்கினர்.
இச்சம்பவம் குறித்து, அந்த வாகனத்தின் டிரைவர் போலீசில் நேற்று புகார் அளித்தார். பிலாய் பகுதியைச் சேர்ந்த சன்னி அகர்வால் உள்ளிட்ட 20 பேர் மீது, பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.