ADDED : மார் 06, 2025 07:33 PM
திருவாடானை:''தொகுதி மறுவரையறையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர்,'' என ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
திருவாடானையில் அவர் அளித்த பேட்டி:
இரு மொழிக் கொள்கை தான் நிலையான கொள்கை. தொகுதி மறுவரையறை குறித்த பரபரப்ப்புப் பேச்சு பத்திரிகைகளில் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது. மறுவரையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியான விளக்கம் கொடுத்துள்ளார். அதன்பின்பும், இதை அரசியலாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் நெருக்கத்தில் தான் முடிவு அறிவிக்க முடியும். தேர்தலுக்குள், அ.தி.மு.க., கட்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிரடியாக நிறைய நடக்கவுள்ளன. அதுவரை, பொறுமையாக இருந்துதான் அரசியல் செய்ய வேண்டும். அந்த வழியில் தான், நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.