அரசு நிலத்தில் தொடரும் செம்மண் கொள்ளை; அதிகாரிகள் ஆசியோடு அமோகம்
அரசு நிலத்தில் தொடரும் செம்மண் கொள்ளை; அதிகாரிகள் ஆசியோடு அமோகம்
UPDATED : மார் 10, 2025 07:32 AM
ADDED : மார் 09, 2025 11:51 PM

ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் - வடகால், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட ஐந்து சிப்காட் தொழில் பூங்காகளில் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு, புதிய தனியார் தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம், புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளுக்கு செம்மண் மற்றும் சவுடு மண் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதனால், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு, ஏரி, மேய்க்கால் நிலங்களில் இருந்து, செம்மண் மற்றும் சவுடு மண் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரிஞ்சம்பாக்கம் கிராமத்தில் புல எண்: 208ல், சில நாட்களாக செம்மண் வெட்டி எடுத்ததில், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பொக்லைன் இயந்திரம் வாயிலாக செம்மண் மற்றும் சவுடு மண்ணை வெட்டி எடுத்து, லாரிகள் வாயிலாக, இரவு நேரத்தில் சமூக விரோத கும்பல் கடத்தி வருகிறது.
இந்த கொள்ளை,வருவாய் துறை, கனிமவளதுறை, போலீசார் ஆதரவுடன் தொடர்ந்து நடந்து வருவதாக, கிராமத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். கடத்தப்படும் இந்த செம்மண்ணை, படப்பை மேம்பாலம் கட்டுமான பணிக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அப்பகுதியின் முக்கிய அரசியல் புள்ளி உதவியுடன் நடக்கும் இந்த மண் கொள்ளை, அப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதே பகுதியில் உள்ள ஏரி மற்றும் வனப்பகுதியில் 500க்கும் அதிகமான மரங்களை அகற்றியுள்ளனர். இதுவரை, 50,000க்கும் அதிகமான லாரிகளில் மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேயக்கால் புறம்போக்கு பகுதியில்அதிகமாக பள்ளங்கள் தோண்டப்படுவதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அதில் விழுந்து உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளதோடு, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் தொடர்ந்து நடக்கும் இந்த மண் கொள்ளையை குறித்து, வருவாய் துறையின், காவல் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, மண் திருட்டில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால் அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இயற்கை வளங்களை சுரண்டும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.