அமுல் நிறுவன பால் வந்தாலும் பாதிப்பில்லை என்கிறது ஆவின்
அமுல் நிறுவன பால் வந்தாலும் பாதிப்பில்லை என்கிறது ஆவின்
ADDED : மே 09, 2024 06:50 AM

சென்னை: தமிழகத்தில், குஜராத் மாநில அமுல் நிறுவனத்தின் பால் விற்பனைக்கு வந்தாலும், ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக, பால் விற்பனையை துவங்குவதற்கு, குஜராத் மாநிலத்தின் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் திட்டமிட்டு உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஆவின் பால் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் நேற்று வெளியானது.
இதையடுத்து, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பால் மற்றும் பால் பொருட்களை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய தரத்தில் தயாரித்து, குறைவான விலையில் ஆவின் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பால் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் நிறுவனம் தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம், தர்மபுரி, துாத்துக்குடி, கரூர் மாவட்டங்களில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், எளிய முறையில், புதிதாக பால் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் வினியோகம் எளிதாகவும், துரிதமாகவும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.