வீண் அரசியலை தவிருங்கள் அன்புமணிக்கு ராஜா 'அட்வைஸ்'
வீண் அரசியலை தவிருங்கள் அன்புமணிக்கு ராஜா 'அட்வைஸ்'
ADDED : ஆக 24, 2024 11:11 PM
சென்னை:'தமிழகத்தை நோக்கி ஆர்வத்துடன் வரும் தொழில் முதலீடுகளுக்கு, பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலை தவிருங்கள்' என, தொழில்துறை அமைச்சர் ராஜா அறிவுறுத்தி உள்ளார்.
'தமிழக தொழில் முதலீடுகள் குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்திஇருந்தார்.
இதற்கு, அமைச்சர் ராஜா அளித்துள்ள பதில்:
தமிழக சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின் போதே, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் பெற்றுள்ள தொழில் முதலீடுகள், துவக்கப்பட்ட தொழிற்சாலைகள், அதன் வாயிலாக கிடைத்த வேலைவாய்ப்பு குறித்து விரிவாகவும், தெளிவாகவும் தெரிவிக்கப் பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 16 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டதுடன், புதிதாக 21 சிப்காட் பூங்காக்கள் அமைய உள்ளன. இந்த காலக்கட்டத்தில், 3.31 லட்சம் பேருக்கு வேலை உருவாக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மக்களுக்கான பாரபட்சமற்ற வாய்ப்பு, முதலீடு வாயிலாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவிப்பவர்கள், நிறைய கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்துவதே சரியாக இருக்கும்.
உங்களால் புதிய முதலீடுகளையோ, புதிய தொழிலையோ கொண்டு வர முடியாவிட்டாலும், தமிழகத்தை நோக்கி ஆர்வத்துடன் வரும் முதலீடுகளுக்கு, பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலையாவது தவிருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

