'சைபர் கிரைம்' மோசடி தடுக்க விழிப்புணர்வு 'ஆடியோ' தயார்
'சைபர் கிரைம்' மோசடி தடுக்க விழிப்புணர்வு 'ஆடியோ' தயார்
ADDED : ஏப் 29, 2024 06:10 AM
சென்னை : தமிழகத்தில் அதிகரித்து வரும், 24 வகையான சைபர் கிரைம் மோசடிகள் குறித்து, சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்ய, மாநில சைபர் கிரைம் போலீசார், 'ஆடியோ' பதிவுகளை தயாரித்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லுாரி கட்டடத்தில், மாநில சைபர் கிரைம் பிரிவின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள சைபர் கிரைம் கட்டுப்பாட்டு மையத்தில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தடயவியல் ஆய்வகமும் செயல்படுகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் எச்சரிக்கை செய்து வருகிறார். அவரது தலைமையிலான போலீசார், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.
அந்த வகையில், தமிழகத்தில் அதிகரித்து வரும், 24 வகையான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விழிப்புணர்வு செய்ய, 'ஆடியோ'க்களை தயார் செய்து உள்ளனர்.
இதுகுறித்து, மாநில சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மக்களிடம் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் லட்சக்கணக்கணக்கில் பணத்தை இழந்து விடுகின்றனர். அதிலும், 'ஆன்லைன்' வாயிலாக குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கின்றன. பகுதி நேர வேலை, சிம்கார்டு வங்கி கணக்கு 'லாக்' ஆகிவிட்டது.
அதை சரி செய்து தருவதாக கூறும் மோசடி கும்பலிடம், ஓ.டி.பி., எண்கள், ஏ.டி.எம்., கார்டு ரகசிய எண்கள் என, அனைத்தையும் தெரிவித்து விடுகின்றனர்.
இதுபற்றி அவர்களிடம் மேலும் விழிப்புணர்வு செய்ய, ஆடியோ பதிவுகளை தயாரித்துள்ளோம். அவற்றை விரைவில் ஒலிபரப்பு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

