ADDED : ஜூன் 30, 2024 08:02 PM

ஊட்டியில் பெற்ற குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் 31, மனைவி ரம்யா 21. பிரேம் ஊட்டியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் நேற்று காலை 7:00 மணிக்கு பணிக்கு சென்றார்.
இந்நிலையில், தம்பதியின், 5 மாத பெண் கைக்குழந்தையின் கன்னங்கள் சிவந்த நிலையில் எந்த அசைவும் காணப்படாமல் இருந்தது. இதை பார்த்த ரம்யா பயந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
குழந்தையை பரிசோதனை செய்து டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ரம்யா ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்.ஐ., சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரம்யா வீட்டின் அருகில் துணி துவைத்து கொண்டிருந்தபோது குழந்தை அழுததால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்துள்ளது, என்பது தெரியவந்தது. பின், போலீசார் பிரேமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

