'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரித்து முடிக்க 'கெடு'
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரித்து முடிக்க 'கெடு'
ADDED : ஆக 02, 2024 09:50 PM
மதுரை::சென்னை தண்டையார்பேட்டை உதித் சூர்யா. இவர் 2019ல் நடந்த, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததாக, கண்டமனுார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர். படிப்பை தொடர விருப்பமின்றி, அவர் விலகிக் கொண்டார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய, புரோக்கராக செயல்பட்ட சென்னை கீழ்பாக்கம் தருண்மோகன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி., தரப்பு: வழக்கில் தொடர்புடைய பெற்றோர், மாணவர்கள், புரோக்கர்களாக செயல்பட்டோரில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆள்மாறாட்டம் செய்து, எட்டு பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்தால் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிக்கப்படும். வழக்கை ரத்து செய்யக்கூடாது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: யார் தவறு செய்தனர் என்பதை கண்டறிந்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி.,போலீசார் நான்கு மாதங்களில் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.