'விபத்துகளை தடுக்க பாடாவதி பஸ்களை ஒழிக்க வேண்டும்!'
'விபத்துகளை தடுக்க பாடாவதி பஸ்களை ஒழிக்க வேண்டும்!'
ADDED : ஏப் 30, 2024 10:32 PM
சென்னை:'அரசு பஸ்கள் விபத்து ஏற்படாமல் தடுக்க, ஊழியர்கள், உதிரிபாகங்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்' என, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான, சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில், தினமும் 1.80 கோடி பேர் பயணம் செய்கின்றனர். விபத்து ஏற்படாமல் தடுத்து, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வது, அரசு போக்குவரத்து கழக நிர்வாகங்களின் கடமை. பழைய பஸ்களை நீக்கி, புதிய பஸ்களை கொண்டு வர, ஓராண்டு ஆகலாம்; 5,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் காலாவதியாக உள்ளன.
ஒரே நேரத்தில் இவ்வளவு பஸ்களை மாற்ற முடியாது. உடனடி தீர்வாக உதிரிபாகங்கள் வாங்க, அரசு நிதி ஒதுக்க வேண்டும். தொழிற்நுட்ப பிரிவில், 4,000த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தேர்வு நடத்தி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த, போதிய நிதியை ஒதுக்கி, நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:
போக்குவரத்து கழகங்களில், 98 பஸ்களை பராமரிக்க, ஒரு பணியாளர் தேவை. தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் பணிபுரிந்து வருகின்றனர். 15 ஆண்டு காலமாக புதிய நியமனங்கள் எதுவும் இல்லை. பழைய பஸ்களை பராமரிக்க கூடுதல் பணியாளர்கள் தேவை. ஆனால், பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
தேவையான பணியாளர்கள் இருந்தால் தான், குறைவான நேரத்தில் பஸ்களை பராமரித்து, பயன்பாட்டுக்கு அனுப்ப முடியும். அனைத்து பிரிவுகளிலும் பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். காலாவதியான பஸ்களை நீக்கி, புதிய பஸ்களை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.