'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி இயக்குனருக்கு ஜாமின் மறுப்பு
'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி இயக்குனருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஏப் 22, 2024 04:29 AM
சென்னை : 'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடியில் கைதான இயக்குனர்களில் ஒருவரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை, மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் 4,414 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் பெற்று, மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன் உட்பட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில், கைதாகி சிறையில் உள்ள சவுந்தரராஜன், ஜாமின் கோரி, 'டான்பிட்' என்ற, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.தனசேகரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு ஆகியோர் ஆஜராகினர்.
முதலீட்டாளர்கள் 89,000த் திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து, 4,414 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். மத்திய, மாநில அரசின் அமைப்புகளிடம் அனுமதியை பெறாமல், நிதி நிறுவனம் துவக்கி உள்ளனர்; போலியான வாக்குறுதியை கொடுத்து, முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர்.
ஜாமின் வழங்கினால் வெளிநாடு தப்பியோடவும், சாட்சிகள், ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளது. மீட்கப்பட வேண்டிய தொகை அதிகம் என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
இதை ஏற்ற நீதிபதி, 'வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் ஜாமின் மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முக்கிய நபரான அலெக்ஸாண்டர் தலைமறைவாக உள்ளார்.
'அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே, முதலீடுகள், மோசடி குறித்த முழு விபரம் தெரியவரும். எனவே, மனுதாரருக்கு ஜாமின் வழங்க முடியாது' எனக் கூறி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

